அம்பை,மே 25: நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மாஞ்சோலையில் தங்கியுள்ள தொழிலாளர்களை பாதுகாப்பான சமவெளிக்கு வருமான வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் அங்குள்ள தொழிலாளர்கள் வீட்டு விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்தனர். அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் அறிவுறுத்தலின்படி மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று சேரன்மகாதேவி சப்-கலெக்டர் (பொ) சிவகாமிசுந்தரி, அம்பை தாசில்தார் வைகுண்டம் மற்றும் விஏஓ, கிராம உதவியாளர் உள்ளிட்டோர் மாஞ்சோலைத் தோட்டப்பகுதிகளில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து பாதுகாப்பு காரணங்களுக்காக 3 நாட்கள் சமவெளி நகர பகுதியில் வந்து தங்குமாறு அறிவுறுத்தினர். ஆனால் அங்குள்ள மக்கள் இதுபோன்ற வெயில், மழை, காற்று பலவற்றை நாங்கள் பார்த்துள்ளோம். மழை, காற்றெல்லாம் எங்களுக்குப்பழக்கமானது தான். நாங்கள் எங்களை பாதுகாத்துக்கொள்கிறோம். கீழே வந்தால் இங்கு எங்களுக்கான வாழ்வாதாரம் பறிபோகுமோ? என்கிற அச்சம் எங்களுக்கு உள்ளது. எனவே கீழே வரமாட்டோம் என்று அதிகாரிகளிடம் திட்ட வட்டமாக மறுத்து விட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களுக்கு பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி விட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர்.