நெல்லை, டிச. 4: நெல்லை டவுனில் முன்விரோதத்தில் பால் வியாபாரி வெட்டிக்கொலை செய்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் காவல்பிறை தெருவைச் சேர்ந்த பழனி மகன் கண்ணன் (37). பால் வியாபாரியான இவர் நெல்லையப்பர் கோயிலில் கோசாலையில் மாடுகளை பராமரிக்கும் தற்காலிக பணியும் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி வீட்டை விட்டு வெளியே கடைக்கு கண்ணன் வந்த போது பைக்கில் வந்த டவுன் வையாபுரி தெருவை சேர்ந்த சீனிமாரியப்பன் (30), இவரது நண்பரான சிவந்திப்பட்டியைச் சேர்ந்த பேச்சிமுத்து (27) உட்பட 3 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிந்து டவுன் வையாபுரி தெருவைச் சேர்ந்த சீனிமாரியப்பன் மற்றும் சிவந்திப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து (27) ஆகிய இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சீனிமாரியப்பன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்வதாகவும் இதுகுறித்து கண்ணன் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. ஆனாலும் அதனை வெளியே காட்டிக்ெகாள்ளாமல் கடந்த வாரம் டவுனில் ஒரு வீட்டில் சீனிமாரியப்பன், அவரது ஆதரவாளர்கள் 2பேரும், கண்ணனும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சீனிமாரியப்பனும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து கண்ணனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.