நெல்லை, மே 21: நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 28ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. நெல்லை சந்திப்பில் பிரசித்தி பெற்ற சவுந்திரவல்லி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கு 16வித சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வேதபாராயணம், பணிமாலை, பஞ்சபுராணம் நடந்தது. மாலையில் அப்பர் புறப்பாடும், இரவு ரிஷப வாகனத்தில் பலிநாதர் 9 சந்தியில் ஆவாஹன பலி, சந்தி மாலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மூஷிக வாகனத்தில் விநாயகர், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. விநாயகர், சுவாமி, அம்பாள் ரத வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம், வரும் 28ம் தேதி காலை 9 மணிக்கு மேல் நடக்கிறது. 10ம் திருநாளான 29ம் தேதி தாமிரபரணியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.