நெல்லை, ஜூன் 9: தினகரன் செய்தி எதிரொலியாக நெல்லை டவுன் காட்சி மண்படத்தில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில் தடைகளை அமைக்கப்பட்டன. நெல்லை டவுன் சேரன்மகாதேவி ரோட்டில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலுக்கு உரிய காட்சி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு கனரக வாகனங்கள் நுழைந்து சென்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மரத்தடி பாரங்கள் ஏற்றி கனரக லாரிகளும், அதிக பாரம் ஏற்றி டாரஸ் லாரி போன்ற வாகனங்களும் சென்றன. அப்போது அடிக்கடி இந்த மண்டபத்தின் தூண்களில் கனரக வாகனங்கள் மோதி தூண் மேல்பகுதி சேதமடைந்தன.
இதை தடுப்பதற்காக இந்த சாலை முழுவதும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மாற்று பாத ஒதுக்கப்பட்டது. மேலும் காட்சி மண்டபத்தின் மையப்பகுதியில் ஒரு நுழைவு பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டது. மற்ற இரு சிறிய நுழைவுப்பகுதி வழிகளில் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் மைய நுழைவின் ஒரு பகுதியில் மட்டும் தடுப்பு வைக்கப்பட்டதால் மற்ற பகுதி வழியாக உள்ளே வாகனங்களை நிறுத்தி வாகனம் நிறுத்தமாக பயன்படுத்த தொடங்கினர். இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக போக்குவரத்து போலீசார் மற்றொறு பகுதியிலும் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் தற்போது வாகனங்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.