நெல்லை, ஜூன் 27: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான நேற்று நெல்லை மாநகர மற்றும் மாவட்ட காவல் துறை அலுவலகங்களில் போதைப் பழக்கத்திற்கு எதிராக போலீசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நெல்லை மாநகர போ லீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் அனைத்து காவல் அதிகாரிகளும், அலுவலர்களும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
கமிஷனரின் அறிவுறுத்தலின்படி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வுகளிலும் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதேபோல், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி சிலம்பரசன் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவரும் கலந்து கொண்டு, ‘‘போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்.
மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் என்று உறுதி மொழி எடுத்தனர்.