வீரவநல்லூர், ஆக.30: நெல்லை அருகே விவசாயி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் நடராஜன் மகன் கணேசன்(38). விவசாயி. இவருக்கு செல்வி (34) என்ற மனைவியும், சவுமியா (13) என்ற மகளும், பிரவின் (11) என்ற மகனும் உள்ளனர். கணேசன் தற்காலிமாக சென்னையில் வசித்துவந்த நிலையில் அவரது குடும்பத்தினர் தருவையில் குடியிருந்து வருகின்றனர். சேரன்மகாதேவியில் கடந்த ஆண்டு ஆக.24ல் மாலை என்பரின் மனைவி மாரியம்மாள் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் கணேசன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கணேசன், வழக்கு வாய்தாவிற்காக நேற்று முன்தினம் நெல்லை கோர்ட்டுக்கு வந்துள்ளார். வாய்தாவை முடித்துவிட்டு சேரன்மகாதேவிக்கு வந்த கணேசன் மாலை 5.30 மணியளவில் தருவைக்கு பைக்கில் திரும்பியுள்ளார். இதனை நோட்டமிட்டு வந்த மர்மகும்பல் தருவை மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கணேசனை அரிவாளால் தலைதுண்டித்து வெட்டி படுகொலை செய்தது. இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாரியம்மாள் கொலை எதிரொலியாக கணேசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மாரியம்மாள் கொலைக்கு பதிலடியாக கொலை நடந்த 2 தினங்களில் கணேசனின் உறவினரான ராசு என்ற முத்துப்பாண்டியன்(62) என்பவரை மாரியம்மாளின் உறவினர்கள் வெட்டி கொலை செய்தனர்.
இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த கணேசனை பிரச்னை தீரும் வரை வெளியூரில் தங்குமாறு போலீசார் அறிவுறுத்தியதை அடுத்து கணேசன் சென்னையில் தங்கியுள்ளார். வழக்கு வாய்தாவிற்கு கணேசன் வருவதை அறிந்த எதிர் தரப்பினர் திட்டமிட்டு கொலை சம்பவத்தை அரங்கேற்றியது போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து எஸ்.பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஷ்குமார், சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் சேக் அப்துல் காதர், நெல்லை ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இக்கொலைச்சம்பவத்தை அடுத்து சேரன்மகாதேவியில் ெதாடர்ந்து பதற்றம் நிலவுவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.