நெல்லை, ஆக. 29: நெல்லையில் ஆக.29ம் தேதி நடக்கும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சிக்கான இடத்தை கலெக்டர் கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் ரூபேஸ்குமார் மீனா ஆகியோர் ஆய்வு செய்தனர். பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் வருகிற 31ம் தேதி ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் நெல்லை கலெக்டர் கார்த்திகேயன், 4 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 5 ஆயிரம் பெற்றோர்கள் வீதம் 20 ஆயிரம் பெற்றோர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஸ் குமார் மீனா ஆகியோர் ஆய்வு செய்தனர். துணை போலீஸ் கமிஷனர் (தலைமையிடம்) அனிதா, உதவி போலீஸ் கமிஷனர் காமேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.