பந்தலூர், ஜூன் 27: நெல்லியாளம் நகராட்சிக்கு நிரந்தரமாக ஆணையாளரை நியமிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. 95 சதுர கிலோ மீட்டம் பரப்பளவு கொண்ட நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
சமீப காலமாக நெல்லியாளம் நகராட்சிக்கு வரும் ஆணையாளர்கள் நீண்ட நாட்கள் பணியில் இருப்பதில்லை. பல்வேறு காரணங்களுக்காக மாற்றலாகி செல்கின்றனர். அதனால் நகராட்சியின் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படுகிறது.
தற்போது ஆணையாளர் மற்றும் பொறியாளர் உள்ளிட்ட பதவிகள் வெற்றிடமாக இருந்து வருகிறது. கூடலூர் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் நெல்லியாளம் நகராட்சியின் கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றனர். அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. எனவே நெல்லியாளம் நகராட்சிக்கு ஆணையாளர் மற்றும் பொறியாளர் காலி பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.