நெல்லிக்குப்பம், செப். 4:நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு விநாயகர் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் செல்வமுத்து (44). இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். இந்த நிலையில், இரவு மர்ம நபர்கள் பைக்கின் பூட்டை உடைத்து திருடி செல்ல முயன்றுள்ளனர். பைக் ஸ்டார்ட் ஆகாததால் சிறிது தூரம் மாருதி நகர் வரை தள்ளி சென்று தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றுள்ளனர்.பின்னர் அதே பகுதியில் உள்ள பாபா நகரில் வசித்து வரும் மண்ணாங்கட்டி மகன் திருமலை (44) என்பவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடி சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்க்கும்போது இருவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை காணவில்லை என தேடி உள்ளனர். அப்போது மாருதி நகர் பகுதியில் பைக் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து செல்வமுத்து, திருமலை ஆகிய இருவரும் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு பைக் தீ வைத்து எரிப்பு: மற்றொரு பைக் திருட்டு
previous post