பேரணாம்பட்டு, மார்ச்13: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் புகுந்த 2 காட்டு யானைகள் அங்கிருந்த நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாரங்கல், அரவட்லா, கோட்டையூர், எருக்கம்பட்டு, குண்டலபல்லி, கோக்கலூர், மூத்துக்கூர், டிடி மோட்டூர், கொண்டமல்லி போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. அங்கு வனவிலங்குகள் உணவுகள் மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது அங்குள்ள விவசாய நிலங்களிலும் கிராமங்களிலும் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4.15 மணி அளவில் அரவாட்லா கிராமத்தை சேர்ந்த குமரேசன், சஞ்சீவி, சுப்பிரமணி, ஆகியோரின் விவசாய நிலத்தில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு இருந்து நெற்பயிர்களை சாப்பிட்டு மிதித்து சேதப்படுத்திக் கொண்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உடனே இதுகுறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கூச்சலிட்டு பட்டாசுகள் வெடித்தும், பாணம் விட்டு வெடித்தும், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பின்னர், காலையில் வனத்துறையினர் காட்டு யானைகள் சேதம் ஏற்படுத்தியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர்.