குடியாத்தம், செப்.16: குடியாத்தம் அருகே காட்டு யானை அச்சுறுத்தல் காரணமாக விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களை முன்னதாகவே அறுவடை செய்ய தொடங்கியுள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமம் குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிர் செய்து வருகின்றனர். இந்த விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து நெல், வாழை, தக்காளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அந்த யானைகளை விரட்ட சென்றால் அவர்களையும் துரத்தி வருவதால் அச்சப்பட்டு யாரும் அருகே செல்வதில்லை. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், கதிர்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், தக்காளி, வாழை மரங்கள் ஆகியவற்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒற்றை யானை சேதப்படுத்தி விட்டு சென்றது.
அந்த யானை தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் முன்னதாகவே நெற்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். எனவே, யானைகளால் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை வனத்துறையினர் நேரில் பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.