திருப்பூர், மே 29: திருப்பூர் மாநகராட்சி 4வது வார்டு நெருப்பெரிச்சல் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் பதிவு அலுவலகம் அருகில் பயன்பாடற்ற பாறைக்குழியில் கடந்த 3 மாதங்களாக மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசத்தொடங்கியது. துர்நாற்றம் வீசுவதால் சுவாச கோளாறு உள்ளிட்ட சுகாதார பிரச்னைகள் ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் நேற்று பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த மாநகராட்சி வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதியில் இனி குப்பை கொட்டமாட்டோம் எனவும், துர்நாற்றத்தை போக்க பிளீச்சிங் பவுடர் தெளிப்பதாக கூறியதை தொடர்ந்து அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.