திருப்பூர், ஆக. 15: திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த ஜி.என். கார்டன் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன். பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி வனரோஜா. கடந்த 10ம் தேதி இரவு பரந்தாமன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சமயபுரம் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்ததுடன், பரந்தாமனின் 2 மகள்களின் கல்லூரி, பள்ளி சான்றிதழ்களும் எரிந்துவிட்டன. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் நேற்று தீ விபத்துக்குள்ளான பரந்தாமன் வீட்டை நேரில் பார்வையிட்டார்.
அப்போது, பரந்தாமன் குடும்பத்தினருக்கு நிதியுதவி மற்றும் அரிசியை மேயர் வழங்கினார். மேலும், பரந்தாமனின் 2 மகள்களுக்கு பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடை, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கவும் மேயர் தினேஷ்குமார் பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், தி.மு.க. பாண்டியன்நகர் பகுதி செயலாளர் ஜோதி, 5வது வட்ட செயலாளர் பாப்புசாமி, இளைஞரணி ராஜ், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.