கடலூர், ஆக. 21: முகநூல் மூலம் பழகி, பெண் குரலில் பேசி நெய்வேலியை சேர்ந்த வியாபாரியிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ராஜ்மோகன்(53). இவர் தீ அணைக்கும் சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், வாசுகி பாண்டியன் என்ற பெயரில் ஒரு பெண் முகநூல் மூலம் ராஜ்மோகனுக்கு அறிமுகமாகி உள்ளார். பின்னர் தொலைபேசியிலேயே நட்பாக சிறிது காலம் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் வாசுகி பாண்டியன், தனது தாயாரின் உடல்நிலை சரியில்லை என்றும், கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், உயிர் போகும் நிலையில் உள்ளார் என்றும், தனக்கு உடனடியாக ரூ.1,60,000 தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
இதை நம்பி வாசுகி பாண்டியன் வங்கி கணக்கிற்கு ரூ.1,60,000 ராஜ்மோகன் அனுப்பியுள்ளார். இதன் பிறகு வாசுகி பாண்டியன், ராஜ் மோகனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜ்மோகன் இது குறித்து கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த புகார் மீது சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் மேற்பார்வையில் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் ராஜ்மோகனிடம், பணத்தை ஏமாற்றியது, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜசிம்மன் (40) என்பதும், இவர் முகநூல் மூலம் ராஜ்மோகனிடம் பெண் குரலில் பேசி ஏமாற்றியதும் தெரியவந்தது. மேலும் இவர் தனது முகநூல் பக்கத்தில் கூகுளில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு அழகிய பெண்ணின் புகைப்படத்தை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் கரூரில் மறைந்திருந்த அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.