நெய்வேலி, ஜூலை 5: நெய்வேலி அடுத்த தென்குத்து ஊராட்சி வானதிராயபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக வானதிராயபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் வீடு நிலம் உள்ளிட்ட பகுதிகளை அளவீடு செய்வதற்கு என்எல்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் இருந்த சிலர் செல்போன் டவர்களில் ஏறி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த நெய்வேலி நகர காவல்துறையினர் செல்போன் டவர்களில் ஏறி நின்று போராட்டம் நடத்தியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். உண்ணாவிரத போராட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெகதீசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரிய ஆறுமுகம் மற்றும் தேசிய முற்போக்கு திராவிடர் நகர செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு என்எல்சி நிறுவனம் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும் என்றும் 15 ஆண்டுகளாக பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வானதிராயபுரம் கிராமத்திற்கு மீண்டும் பத்திரப்பதிவு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.