நெய்வேலி, ஜூன் 5: என்எல்சி தொமுச தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொமுசவில் 3,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த தொழிற்சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்த நிலையில் சங்கத்திற்கான தேர்தல் நடத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து தொழிற்சங்க ரகசிய வாக்கெடுப்பிற்கு பிறகு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என தொமுச சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி தொழிற்சங்களுக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில், தொமுச அங்கீகரிக்கப்பட்ட முதன்மை தொழிற்சங்கமாக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தொமுச பேரவை உறுதியளித்தபடி தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் 5.6.2025 அன்று நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் என்எல்சி தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தொழுச நிர்வாகிகள் என்எல்சி பழுப்பு சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், நகர நிர்வாக அலுவலகம் போன்ற இடங்களில் தொமுச உறுப்பினர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் தொமுச தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், அலுவலக செயலாளர், துணைத் தலைவர்கள், பகுதி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்கு 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை 5 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொமுச உறுப்பினர்கள் அவரவர் பணி செய்யும் இடங்களில் வாக்குகளை செலுத்துவர். இன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.