தஞ்சாவூர், ஜூன் 14: தஞ்சாவூரை அடுத்த மருங்குளம் பகுதியில் நெடுஞ்சாலையோரம் ஊர் பெயர் பலகையில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெளியூரில் இருந்து வருபவர்கள் தஞ்சாவூர் வழியை அடையாளம் காணும் வகையில் நகரின் முக்கிய சாலைகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெயர் பலகையை மறைத்தபடி கண்ணீர் அஞ்சலி, திருமண வாழ்த்து போன்ற பல்வேறு போஸ்டர்களை ஒட்டுவதால் அந்த வழியாக புதிதாக வரும் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் திண்டாடுகின்றனர்.
மேலும் ஒரு சில இடங்களில் ஊர் பெயர் எழுத்துக்கள் அழிந்து காணப்படுவதோடு பெயர் பலகை கீழே விழுந்து கேட்பாரின்றி காணப்படுகிறது. மேலும் இரவில் வரும் வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர். உடனடியாக விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.