திருவள்ளூர்: பருவமழையின் காரணமாக சென்னையை ஒட்டிய நெடுஞ்சாலை பகுதிகளில் சாலை ஓரங்களில் மண் குவியல், குவியலாக தேங்கி கிடப்பதால் காற்றின் காரணமாக மண் தூசி சாலைகளில் பறந்து விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கோட்டப் பொறியாளர் டி.சிற்றரசு உத்தரவின் பேரில், உதவிக் கோட்டப் பொறியாளர் ஜி.மகேஸ்வரன், உதவிப் பொறியாளர் எஸ்.கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறையின் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அம்பத்தூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி சாலையிலும், சென்னீர்குப்பம் முதல் ஆவடி வரையிலும், சென்னை – திருத்தணி ரேணிகுண்டா சாலையில், ஆவடி முதல் நெமிலிச்சேரி வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் மண் குவியல்கள் அகற்றப்பட்டு வருகிறது.
சாலையின் மைய தடுப்பு சுவர்களுக்கும் கருப்பு, வெள்ளை வர்ணம் பூசப்பட்டு வருகிறது. மேலும் மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில் உள்ள பருத்திப்பட்டு மேம்பாலத்திற்கு கருப்பு வெள்ளை வர்ணம் பூசப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.