கோவை, ஆக.23: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கோவை தெற்கு உட்கோட்டத்திற்குட்பட்ட வடகோவை, ராமநாதபுரம், செட்டிபாளையம் ரோட்டில் சிறு பாலங்கள் பராமரிப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. கோவை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி மேற்பார்வையில் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமாகி இருப்பதையொட்டி ரோட்டோரம் உள்ள முட்புதர்கள், மண்குவியல், சகதிகள் அகற்றப்பட்டு வருகிறது.
மேலும் சிறு பாலங்களுக்கு இடையே உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு மழை நீர் வழிந்து பாயும் வகையில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. பாலங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பெய்த மழையினால் சிறு பாலங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரி செய்யப்பட்டு வருகிறது.
கன மழை பெய்தாலும் ரோட்டில் மழையினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மழை நீர் முழுவதும் சிறு பாலங்கள் வழியாக பாய்ந்து ஓடும் வகையில் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் சிறுபாலங்களில் நடந்த பராமரிப்பு பணிகள் காரணமாக மழை நீர் தடையின்றி செல்கிறது. எந்த இடத்திலும் மழை நீரால் ரோடு பகுதியில் பாதிப்பு ஏற்படவில்லை என மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.