தோகைமலை, மே 20: தரகம்பட்டி அருகே மைலம்பட்டியில் நீண்டநாட்களாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சாலை அமைத்து இருந்ததை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே மைலம்பட்டியில் கரூர்-வையம்பட்டி சாலையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் அமைந்து உள்ளது. தனியார் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு செல்லும் சாலையானது, தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஆகும். இதில் தனியார் நிறுவனம் அரசு அனுமதி இல்லாமல் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை வெகு நாட்களாக ஆக்கிரமித்து அதில் தார்சாலை அமைத்து உள்ளனர். இதனால் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் தார்சாலை அமைத்து உள்ளதை அகற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனை அடுத்து பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கரூர் நெடுஞ்சாலைத்துறை க(ம)ப கோட்டம், கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறை க(ம)ப உட்கோட்டம், தரகம்பட்டி நெடுஞ்சாலைத்துறை க(ம)ப பிரிவு, மாநில நெடுஞ்சாலையான வையம்பட்டி-கரூர் சாலை (வழி) மைலம்பட்டி உப்பிடமங்களம், மைலம்பட்டி பாரத் பெட்ரோல் பங்க் அருகில் நீண்ட நாட்களாக நெடுஞ்சாலைத்துறையின் நில எல்லை தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததை ஆய்வில் கண்டுபிடித்தனர். பின்னர் கரூர் நெடுஞ்சாலைத்துறை க(ம)ப கோட்டப்பொறியாளர் ரவிக்குமார் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார்.
அதன்பேரில் உதவி கோட்டப்பொறியாளர் கர்ணன், கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம் தரகம்பட்டி உதவிப்பொறியாளர் கோகுல்நாத், நெடுஞ்சாலைத்துறையின் தரகம்பட்டி திறன்மிகு உதவியாளர் நாகராஜ் மற்றும் மைலம்பட்டி ஆர்ஐ அருள்ராஜ், கீழப்பகுதி விஏஓ தமிழரசி உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் மைலம்பட்டியில் உள்ள கரூர்-வையம்பட்டி சாலையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் அமைத்து இருந்த தார்சாலையை பொக்லைன் இயந்திரம்மூலம் அகற்றி அழித்தனர். இதனால் இப்பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.