ராஜபாளையம், ஜூன் 11: நூறுநாள் வேலையை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ராஜபாளையத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பஸ் நிலையம் முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலை சம்பளம் பாக்கியை வழங்க வேண்டும், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் அமுல்ராஜ், திருப்பதி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, ஏஐஒய்எப் மாவட்ட செயலாளர் வக்கீல் பகத்சிங், நகர செயலாளர் அய்யணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் மோடி அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்க மறுக்கிறது. 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு சம்பளம் பாக்கியை வழங்கவில்லை. குடும்பத்தில் கடன்சுமை அதிகரித்து அவதிப்படுவதை தடுக்க நடவடிக்க எடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். நூறு நாளை 200 நாளாக உயர்த்தி வேலை வழங்க வேண்டும். சம்பளத்தை ரூ.700 உயர்த்த வேண்டும். தொழிலாளர்களுக்கு இலவச பட்டா வழங்கி வீடுகட்டி கொடுக்க வேண்டும். திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோஷமிட்டனர்.