நாகப்பட்டினம், ஜூன் 23: நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடி நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினரால் நேற்று மீட்கப்பட்டது. நாகப்பட்டினம் காயாரோகணசாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 96.28 ஏக்கர் நிலம் தியாகராஜபுரம் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை உரிமம் பெற்ற நில அளவையர் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மண்டல இணைஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ராஜா இளம்பெரும்வழுதி ஆகியோர் முன்னிலையில் நேற்று மீட்கப்பட்ட நிலம் கோவில்வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து எல்லை கற்கள் நடும் பணிதுவங்கப்பட்டது. ஆலய நிலங்கள் தனி தாசில்தார் ஜெயபால், கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி, மற்றும் கோவில் பணியாளர்கள் சிவராஜ், நளினா, கல்யாணசுந்தரம் உள்பட பலர் உடனிருந்தனர். சுவாதினம் பெறப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.3 கோடி என இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.