பூந்தமல்லி, பிப்.27: நீலாங்கரையில் நடிகர் விஜய் வீட்டின் மீது செருப்பு வீசிய கேரள வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நீலாங்கரையில் பிரபல நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்யின் வீடு உள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு விழா மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக, காலை 10 மணியளவில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் காரில் புறப்பட தயார் நிலையில் இருந்தார்.
அப்போது, அவரது வீட்டின் நுழைவாயிலுக்கு வெளியே ஏராளமான தவெக நிர்வாகிகளும், ரசிகர்களும் நீண்டநேரம் காத்திருந்தனர். நடிகர் விஜய்யின் வீட்டுக்கு வெளியே காத்திருந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென சிறுவர்கள் அணியும் கால் செருப்பை எடுத்து, வீட்டுக்குள் வேகமாக வீசியுள்ளார். இதை பார்த்ததும் தவெக தொண்டர்கள், போலீசார் மற்றும் காவலாளிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நடிகர் விஜய் வீட்டுக்குள் செருப்பை வீசிய நபரை போலீசார் மடக்கி பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
முதல்கட்ட விசாரணையில், நடிகர் விஜய் வீட்டின் மீது செருப்பை வீசியவர் கேரள மாநிலத்தை சேர்ந்த மணி (27) என்பதும், கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் குழந்தைகள் காலில் செருப்பு அணியாமல் நடப்பதால் பல்வேறு நோய்தொற்று ஏற்படுவதாகவும், இவற்றை தடுக்க வலியுறுத்தி நடிகர் விஜய் வீட்டின் மீது சிறுவர்கள் அணியும் செருப்பை வீசியதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து பிடிபட்ட மணியிடம், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.