ஊட்டி, ஜூன் 3: நீலகிரியில் மழை பெய்த நிலையில் விவசாயிகள் மலை பாங்கான பகுதிகளிலும் பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்ேடாபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் மேற்கொள்வது வாடிக்கை. அதேசமயம், டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை 6 மாதங்கள் நீலகிரியில் மழை குறைந்து காணப்படும். சில சமயங்களில் இந்த 6 மாதங்களில் மழை துளிகள் கூட விழாது. இதனால், இச்சமயங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிடுவார்கள்.
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் மேற்கொள்வதை தவிர்ப்பது வழக்கம். ஜூன் மாதத்திற்கு பின்னரே விவசாயத்தை துவக்குவார்கள். ஆனால், இம்முறை கடந்த மாதம் பெரும்பலான நாட்கள் நீலகிரியில் மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் மழை கொட்டித்தீர்த்தது. தொடர் மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மலைப்பாங்கான பகுதிகளில், காய்கறி விவசாயிகள் பயிர் செய்ய துவங்கி விட்டனர். குறிப்பாக, இத்தலார், நஞ்சநாடு, எமரால்டு, முத்தோரை பாலாடா போன்ற பகுதிகளில் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்ய துவங்கியுள்ளனர்.