பழநி, மே 21: அணைகளில் போதிய அளவு நீர் வரத்து இருப்பதால் பழநி நகருக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி நகருக்கு பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்தும், கொடைக்கானல் சாலையில் உள்ள கோடைகால நீர்த்தேக்கத்தில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடைகால நீர்த்தேக்கத்தில் இருந்து 5.64 எம்.எல்.டி மற்றும் பாலாறு நீர்த்தேக்கம் மூலம் 2.43 எம்.எல்.டி ஆக மொத்தம் 8.07 எம்.எல்.டி குடிநீர் சாதாரண நாட்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நகரில் 149 ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் 128 மினி பவர் பம்ப் மூலம் குடிநீர் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டு வருகிறது.
நகருக்கு குடிநீர் வழங்கும் கோடைகால நீர்த்தேக்கம் மற்றும் பாலாறு- பொருந்தலாறு அணையில் குடிநீர் இருப்பு வெகுவாக குறைந்து வந்ததால் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு 3 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும் சில இடங்களில் குடிநீர் 5 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கோடைகால நீர்த்தேக்கம் நிரம்பி வருகிறது. பாலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இனி வரும் காலங்களில் மழை பெய்யும் என்பதால் பழநி நகருக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.