அம்பை, அக்.19: நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர். கடந்த சில தினங்களாக தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 54.75 அடியாக உள்ள நிலையில் நேற்று காலை நிலவரப்படி 264 கனஅடி நீர் வந்தது. தொடர்ந்து அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அருவியை தொலைவில் இருந்து பார்வையிட மட்டும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. நீர்வரத்து குறையும் வரை இந்த தடை தொடரும் எனத் தெரிகிறது.