கூடலூர், ஜூன் 7: பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னதாக பெய்யத் தொடங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனிடையே இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மே 23ம் தேதி அணைக்கு நீர்வரத்து 100 கன அடியாக இருந்த நிலையில் மழையினால் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கன அடிக்கு மேல் வரத் துவங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 10 நாட்களில் 131 அடி வரை அதிகரித்தது.
இதை அடுத்து கடந்த ஜூன் 1ம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்குகிறது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 129.90 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 670 கன அடியாக குறைந்தது. அணையின் மொத்த நீர் இருப்பு 4675 மில்லியன் கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1200 கன அடி திறந்து விடப்படுகிறது.