வருசநாடு, டிச.4: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மூல வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. வருசநாடு மலைப்பகுதியில் உருவாகும் மூல வைகை ஆறு, நூற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு ஆதாரமாக உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக அரசரடி, வெள்ளிமலை, நொச்சி ஓடை, ஐந்தரைப்புலி, காந்திகிராமம் உள்ளிட்ட மலைப்பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் மழை பெய்யும்போது மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்.
இந்நிலையில், மூல வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் பனி வாடைக்காற்று வீசுகிறது. இதனால், வயதான விவசாயிகள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் குடிநீரை முறையாக காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.