வத்திராயிருப்பு, ஆக.13: கனமழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரேநாளில் 2 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வத்திராயிருப்பு சுற்று வட்டர பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் கூமாபட்டி, கான்சாபுரம், அத்திகோயில், பிளவக்கல் அணை, கோவிலாறு அணை, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் தேங்கி ஓடியது.
மழை காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். இருந்தபோதிலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மகிழ்ச்சி அடைந்தனர். 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 19 அடியாக இருந்தது. இந்த நிலையில் மழையின் காரணமாக அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து தற்போது 21 அடியாக உள்ளது. ஒரே இரவில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.