சிவகங்கை, ஜூன் 15: சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணி, யூனியனின் கீழ் 12,000க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஊரணிகள் உள்ளன. இந்த கண்மாய்களில் பாசன நீரை தேக்கி வைத்து, விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. விவசாய பயன்பாட்டிற்காக கடந்த 2018-19ல் தலா ரூ.35 லட்சம் மதிப்பில் 20 ஜேசிபி இயந்திரங்கள் வாங்கப்பட்டன. விவசாய பணிகளுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.800 என நிர்ணயித்து வாடகைக்கு விடப்பட்டது.
இவற்றின் மூலம் மாவட்டத்தில் உள்ள வைகை, பாலாறு, மணிமுத்தாறு, மற்றும் சிற்றாறுகள் தூர்வாரப்பட்டன. மேலும் நீர் வரத்துகால்வாய்களை சரி செய்தனர். இதனால் மழைக்காலங்களில் கண்மாய்களில் நீர் தேங்கி, பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் கிடைத்தது. இந்நிலையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்குவது மற்றும் வாடகை வசூல் செய்வதில் தொய்வு ஏற்பட்டதால் 20 ஜேசிபி இயந்திரங்களும் வேளாண்மை பொறியியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது 20 இயந்திரங்களும் செயல்பாடின்றி முடங்கி கிடக்கின்றன. அவற்றை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.