திருவாரூர், நவ. 20: திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் பகுதியில் நாட்டின மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் பணியினை துவக்கிவைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் மீன்குஞ்சு விரலிகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் திருநெய்ப்பேர் ஊராட்சி தென்வராயநல்லூர் கிராமத்தில் பரவை குளத்தில் நாட்டின மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் பணியினை கலெக்டர் சாரு மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் ஆகியோர் துவக்கிவைத்தனர். பின்னர் கலெக்டர் சாரு கூறியதாவது: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் கிராமப்புறங்களில் மின் உற்பத்தியினை அதிகரிக்க ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் பொருட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு 40 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்து ஆணை பெறப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து முதற்கட்டமாக இன்றைய தினம் நேற்று திருநெய்ப்பேர் ஊராட்சி தென்னவராயநல்லூர் கிராமத்திலுள்ள 1 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பரவைகுளத்தில் 2 ஆயிரம் நாட்டின மீன்விரலிகள் இருப்பு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தென்வராயநல்லூர் ஊராட்சியில் பனைவிதைப்பு பணியினையும் கலெக்டர் சாரு மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஒ சௌம்யா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கருணாகரன், ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயகுமார், தாசில்தார் செந்தில்குமார், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.