Friday, June 20, 2025
Home மருத்துவம்டயட் நீரிழிவால் வரும் பாதநோய்

நீரிழிவால் வரும் பாதநோய்

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்உலகத்தில் மிக அதிகமான சர்க்கரை நோய் பாதித்தவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். சீனாவில் இன்னும் சற்று அதிகமாக இருக்கிறார்கள். இதில் கவலைக்குரிய செய்தி என்னவென்றால், இன்னும் சில வருடங்களில் சர்க்கரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் நாம் சீனாவை வென்றாலும் ஆச்சரியமில்லை. சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே முறையான கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால் பல உடல் பாகங்களை பாதிக்கும். முக்கிய பாகங்களான கண்கள், இதயம், மூளை, கால்கள் பாதிப்பதோடு பாதங்களை முழுவதுமாக செயலிழக்கச் செய்யும். இதில் பாதம் தொடர்பான பாதிப்புகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் இண்டர்னெல் மெடிசின் சிறப்பு மருத்துவர் சாமிக்கண்ணு.சர்க்கரை நோய் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்போது நரம்புகளின் உணர்ச்சி செயலிழப்பதனால் பாத நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயால் ஏற்படும் பாதநோய் Diabetic neuropathy எனப்படுகிறது. அதோடு சர்க்கரை நோயால் ரத்த ஓட்டக்குறைவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிய பிரச்னைகள் இருக்கிறது. இதன் காரணமாகவும் பாதநோய் ஏற்படுகிறது. பாதநோய் ஏற்பட மூன்று முக்கியமான காரணங்கள் இருக்கிறது. நீரிழிவு உடலில் முக்கிய செயல்பாடுகளை செயலிழக்கச் செய்து பாதிப்பை ஏற்படுத்தி, அதன் விளைவாக பாத நோய்களை உருவாக்குகிறது.நரம்பு மண்டல பாதிப்பு சர்க்கரை நோயாளிகளுக்கு பாதநோய் ஏற்பட மிக முக்கிய காரணம் நரம்பு மண்டல பாதிப்பே ஆகும். உடலில் இரண்டு வகையான நரம்புகள் உள்ளன. உணர்ச்சி நரம்புகள் மற்றும் இயக்க நரம்புகள். தொடுதலை உணரும் நரம்புகள் உணர்ச்சி நரம்புகள் ஆகும். இயக்கங்களுக்கு உட்பட்ட நரம்புகள் (உதாரணமாக கை மற்றும் கால்) இயங்கும்போது இயங்குகிற நரம்புகளே இயக்க நரம்புகள் ஆகும். நீண்ட வருடங்களாக நீரிழிவு உள்ளவர்களுக்கு நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படும்போது பாதத்தின் உணர்ச்சி செயலிழந்து போகும். உணர்ச்சிகள் செயலிழப்பதை எவ்வாறு அறியலாம்? நாம் நடக்கும்போது ஏதேனும் பாதங்களில் பட்டாலோ காயம் ஏற்பட்டாலோ எந்த உணர்வும் இருக்காது. முள் குத்தினால் கூட அதனை உணர முடியாது. உணர்ச்சி செயலிழந்ததால் உணர முடியாத நிலை ஏற்படும். உணர்ச்சி இல்லாத நிலையில் அதை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவேதான் நாம் பாத நோய்க்கு தள்ளப்படுகிறோம். பாதம்தானே பார்த்துக் கொள்ளலாம் என்று அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் பாக்டீரியா கிருமிகள் அதிகளவில் வளர்ச்சி பெற்று காலை அகற்றும் அளவுக்கு கொண்டு சென்றுவிடும். அப்போதும் நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லை என்றால் பாதநோயின் வீரியம் காரணமாக அடுத்தகட்டமாக உயிரிழப்புக்கும் காரணமாகவும் அமையும். நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்வதனால் காயங்கள் அடுத்தகட்டமான சீழ் பிடிக்கும் நிலையை அடைந்து (பழுப்பு வெளிவரும் நிலை) அதன் மீது நமது கவனம் திருப்பப்படுகிறது.ரத்த ஓட்டக்குறைவுரத்த ஓட்டம் பாதிப்பதனாலும் பாதநோய் வருகிறது. சர்க்கரை நோயின் காரணமாக ரத்தக்குழாய்களில் ரத்தம் சீரான ஓட்டம் இல்லாமல் சற்று குறைந்த நிலையில் காணப்படும். இதற்குக் காரணம் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் ஆகும். கட்டுப்பாடின்றி சர்க்கரை நோயை வைக்கும்போது அது ரத்த ஓட்டத்தை தடைபடுத்தி அதோடு விடாமல் அதுவே பாத நோயை ஏற்படுத்துகிறது. ரத்த ஓட்டக்குறைவினால் பாத விரல்கள் கறுப்பாக மாறி உணர்ச்சியை இழக்கும். எனவே, ரத்த ஓட்டக்குறைவின் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பாதநோய் ஏற்படும்.நோய் எதிர்ப்பு சக்திகட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உடலின் நோய் எதிர்ப்பு திறனைக் குறைக்கும் சர்க்கரை கட்டுப்பாடு மிக முக்கியம். முன்பு சொன்னதைப்போலவே நடக்கும்போது பாதத்தில் கவனம் வேண்டும். பாதத்தில் ஏதேனும் காயமோசிராய்ப்போ ஏற்படும்போது அதை கவனிக்காமல் விடும்போது பாதநோய்களுக்கு தள்ளப்படுகிறோம். கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தே காணப்படும், இவர்களுக்கு பாதநோய் தீவிரமானால், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக பாதநோய் கிருமிகளின் (Foot ulcer bacteria) வளர்ச்சி அதிகமாகி பாதநோயை வீரியமாக பரவச்செய்யும். அதனால் நம் கை மற்றும் முகங்களை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு பாதத்தையும் காலையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.பாத நோயின் அறிகுறிகள் காலில் விரல்கள் கருப்பாக காணப்படும், அழுத்தம் அதிகமான பகுதிகளிலே ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் கால் கட்டை விரலில் புண்கள் ஏற்படுவது, நடப்பதற்கு ரத்த ஓட்டம் தேவைப்படுவதால் நடக்கும்போது வலி ஏற்படுவது. நரம்பு மண்டலத்தை பாதிப்பதனால்(Sensory nerves) உணர்ச்சி நரம்பு பாதிக்கப்படுவதால் முதலில் விறுவிறுப்புத்தன்மை ஏற்படும். அதன் பிறகு அதுவே எரிச்சலை ஏற்படுத்தும். பாத தோல்களில் திடநிலை ஏற்படுவது போன்றவை பாதநோயின் அறிகுறிகள் ஆகும்.பாத நோய்க்கான சிகிச்சை முறைகள்பாதங்களை கவனிக்க என்றே Podiatry என்ற தனிப்பட்ட சிகிச்சை முறை, பிரத்யேக நிபுணர்களும் நவீன மருத்துவமும் நம்மிடையே வந்துவிட்டது. வருடத்திற்கு ஒரு முறை கட்டாயம் கால்களை (பாதங்கள்) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே பாத நோயைத் தடுக்க சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வசதியுள்ள இடங்களில் முறைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.பாதத்தின் எந்தப் பகுதியில் பாதிப்பு உள்ளதோ அந்த பகுதியில் அதிக அழுத்தம் செலுத்தாமல் இருப்பது நல்லது. அதற்கு தகுந்த காலணிகளை(Customized footware) பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு பாத நோய் குணமடையவில்லை என்றால் வேறுபகுதியின் சதைப்பகுதியை எடுத்து பாதித்த இடத்தில் வைக்கும் முறை தோல் ஒட்டுதல் (Skin grafting) சிகிச்சை முறையை பின்பற்றலாம்.நவீன சிகிச்சை முறையில் இதயத்தின் ரத்தக் குழாய்களின் ரத்த ஓட்டத்தை சீரமைக்கும் முறையான (Angioplasty Treatment) கால்களின் ரத்தக்குழாய் பாதிப்பிற்கும் வந்துவிட்டது. இதை மருத்துவர்கள் Blood Flow Reconstruction என்று கூறுகிறார்கள். இந்த சிகிச்சை முறைப்படி ரத்தக்குழாய் பாதிப்பை சீரமைக்கலாம். கால்களில் ரத்தக்குழாய் சீரமைப்பு முறை (Peripheral Velocity angio surgery) என்கிறோம். தினமும் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதைப் போல கால்களையும் கண்ணாடியில் பார்க்க வேண்டும். வயதானவர்களுக்கு இது சிரமம் என்பதால் தரையில் கண்ணாடி வைத்து வசதிற்கேற்ப கால்களை கண்ணாடியில் பாருங்கள். வெயில் நேரங்களில் காலணி இல்லாமல் நடப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வெயிலின் வெப்பம் காரணமாக கொப்பளங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் அவை பாதநோய்க்கு வழி வகுக்கும் அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அதோடு பாதங்களை ஈரப்பதம் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். கழிப்பறை சென்றுவிட்டு வரும்போது கால்களில் உள்ள நீரை சரி வர உலர்த்தாமல் விட்டுவிடுகிறோம். இதனால் சேற்றுப்புண் வர வாய்ப்பு உள்ளது. நாளடைவில் இந்த சேற்றுப்புண் பூஞ்சை பாத நோய்க்கு காரணமாக அமைகிறது.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவு காரணமாக பொதுவாகவே பாதங்கள் வறட்சியாக இருக்கும். பாதங்கள் திடமான தோல் பகுதிகளாக காணப்படும். பாதங்களின் திடமான தோல் பகுதியில்; அரிப்பு ஏற்படும்போது கூட கவனம் வேண்டும். அதை முறைப்படி மருத்துவமனை சென்றும் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த அரிப்பே நம் பாத நோய்க்கு காரணமாகிவிடலாம்.– ராஜேஸ்வரி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi