Thursday, June 12, 2025
Home மருத்துவம்ஆலோசனை நீரின்றி சிகிச்சையும் அமையாது!

நீரின்றி சிகிச்சையும் அமையாது!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் அவலம்தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இப்போது சர்வதேச செய்தியாகிவிட்டது. அதிலும் தலைநகரமான சென்னையில் நிலவும் வரலாறு காணாத வறட்சி கண்ணீரை வரவழைக்கக் கூடியது. தினசரி வாழ்க்கைத் தேவைக்காக பொதுமக்கள் தண்ணீர் லாரிகளுக்காக காத்திருப்பதும், காலி குடங்களுடன் தெருக்களில் அலைவதுமாக காணும் காட்சிகள் அவல நாடகத்தின் உச்சகட்டம்.சாதாரண வாய்த்தகராறுகளிலிருந்து கொலை முயற்சிகள் வரையிலும் பொதுமக்களைக் கொண்டு செல்கிறது தண்ணீர் தட்டுப்பாடு. நூறு சதவிகிதம் சுகாதாரத்தைக் கடைபிடிக்க வேண்டிய மருத்துவத்துறை இதில் என்ன சவால்களை சந்திக்கிறது என்பதையும், தண்ணீர் எதனால் எல்லாம் அவசியம் என்பதையும் துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசினோம்…முதலில் மருத்துவரீதியாக மனிதனுக்கு ஏன் தண்ணீர் தேவை என்பதைப் புரிந்துகொள்வோம் என்கிறார் பொது மருத்துவரான விஷால்.‘‘ஒரு மனிதனுக்கு உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும், உடல் சூட்டை பராமரிக்கவும், மூளைச் செயல்பாட்டுக்கும் கூட தண்ணீர் அவசியம்.குறிப்பாக வெயில் 40 டிகிரி செல்ஷியஸைத் தாண்டியிருக்கும் நம் சென்னை வாழ் மக்கள் வியர்வை வழியாக நீர்ச்சத்தை இழப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், உடல் வெப்பநிலையை பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.பொதுவாக, ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்கள் 2 -2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகள் 1- 1.5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சளி, காய்ச்சல் ஏற்பட்டால் கொஞ்சம் அதிகமாக நீர் அருந்தலாம். அப்போதுதான் உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள முடியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப 3 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் அருந்த அறிவுறுத்துவோம். காய்ச்சல், தொற்றுநோய் உள்ள நோயாளிகளை நிறைய தண்ணீர் குடிக்கச் சொல்லுவோம்.நீர் நிறைய குடிப்பதால், சிறுநீர் மூலம் கிருமிகள் வெளியேறும். வயிற்றுப்போக்கு, வாந்தி வந்தவர்கள் உடலில் நீர்சத்தில்லாமல் போய்விடும். அவர்களுக்கு தண்ணீரில் உப்பு சர்க்கரை கலந்து குடிக்கச் சொல்லுவோம். இதன்மூலம் அவர்களுக்கு நீரேற்றம் கிடைக்கும். ஆனால், இதயநோய் உள்ளவர்களுக்கு 500 மிலி தண்ணீர் மட்டும் குடிக்கும்படி கட்டுப்படுத்துவோம்.நோயாளிகளின் உடல்நிலைக்குத் தகுந்தவாறு தண்ணீர் குடிக்க வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நோயாளிகளில் சிலர், எது சாப்பிட்டாலும் வெளியேறுகிறது என்பதற்காக தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள். வயதானவர்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும் உப்பு, சர்க்கரை கலந்த நீரை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.அறுவைசிகிச்சை நடந்த நோயாளிகளுக்கு, திட ஆகாரம் கொடுப்பதற்கு முன்னால் நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளச் சொல்வோம். சாதாரணமாக மனிதனுக்கு வாயில் உமிழ்நீர் உற்பத்திக்குக்கூட தண்ணீர் அவசியம். இல்லையெனில், நா வறட்சி ஏற்பட்டு மயக்கம் வந்துவிடலாம். நம் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள், கழிவுப்பொருட்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.உடலில் நீர் இல்லாவிடில் சிறுநீரகம், பித்தப்பையில் கற்கள் உருவாகும் நிலை ஏற்படும். போதிய நீர் குடிக்காமல் இருப்பவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். மலச்சிக்கலே அனைத்து செரிமானம் தொடர்பான நோய்களுக்கும் முக்கிய காரணமாகிறது. மனிதனின் அடிப்படை ஆற்றலுக்கே தண்ணீர் அவசியம். அது மட்டுமல்ல, பொதுவாகவே மருத்துவமனையை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனும்போது எந்த இடத்திலும் மருத்துவமனையின் தண்ணீர்த் தேவையை குறைக்க முடியாது.’’தனியார் மருத்துவமனை ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி சுஜய் சாம்பமூர்த்தியிடம் இதுபற்றி பேசினோம்…‘‘சென்னை முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள இந்த சூழலில், நாங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த ஒரு மாதமாக இந்த சிக்கலை அதிகம் எதிர்கொள்கிறோம். நிலைமை மிக மோசமாக உள்ளது. குறிப்பாக தீவிர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நாங்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.எங்களுடைய பல்நோக்கு மருத்துவமனையில் 4 ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளது. ஒரு அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மொத்த ஆபரேஷன் தியேட்டரையும் கிருமிகள் நீக்கம்(Sterilize) செய்வோம். அங்கிருக்கும் உபகரணங்கள், கருவிகள் அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான தண்ணீரை நிறுத்தவே முடியாது.ஏற்கனவே போர்வெல் இருந்தாலும், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியே வாங்கிக் கொண்டிருந்தோம். இப்போது தண்ணீர் பற்றாக்குறையால் 25 ஆயிரம் லிட்டர் வரையே எங்களுக்கு தருகிறார்கள். தேவை அதிகம் என்பதால், விலையும் அதிகம் கொடுத்து வருகிறோம்.அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சைப்பிரிவுகளுக்கு தண்ணீரை நிறுத்தவே முடியாது. குறிப்பிட்ட சில தள்ளிப்போடக்கூடிய அறுவை சிகிச்சைகளை(Elective Surgery) ஒருவாரம் கழித்து வருமாறு நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறோம். இது சரியானதல்ல என்பது தெரிந்தாலும், வேறு வழியில்லாமல் இந்த நடைமுறையை பின்பற்றுகிறோம்.நூறு சதவீத சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டிய இடத்தில் மருத்துவத்துறை இருக்கிறது. நீர் மேலாண்மை ஒருவரின் அறிவுறுத்தல்படி, சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்கள் மருத்துவமனையில் மருத்துவரல்லாத ஊழியர்கள் தண்ணீர் நுகர்வை குறைப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறார்கள். ஒரு சுற்றுச்சூழல் நிபுணர் அறிவுறுத்தலோடு, நோயாளியின் அறையில் மட்டும் வெஸ்டர்ன் டாய்லட்டில் தண்ணீர் ஃப்ளஷ் செய்ய அனுமதிக்கிறோம். மற்ற இடங்களில் தண்ணீரை கப் மூலமாகப் பிடித்து ஊற்ற அறிவுறுத்தியிருக்கிறோம்.தோட்டத்தில் நீர் பாய்ச்சுவது, ஆம்புலன்ஸ் மற்றும் கார் சுத்தம் செய்வது, தரை சுத்தம் செய்வது போன்றவற்றுக்கு RO வாட்டர் ப்ளான்டில் வெளியேறும் நீரை வீணடிக்காமல் உபயோகித்து வருகிறோம். இப்போது ஏசியில் வெளியேறும் தண்ணீரையும் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.எங்கெல்லாம் தண்ணீரின் தேவையை குறைத்துக் கொள்ள முடியுமோ அங்கெல்லாம் கட்டுப்படுத்தியும், நூறு சதவீத சுகாதாரம் பேண வேண்டிய அறுவைசிகிச்சை அறைகள், தீவிரசிகிச்சை, அவசரசிகிச்சை, புறநோயாளிகள் பிரிவு போன்றவற்றில் மட்டும் தண்ணீர் வழங்கலை கட்டுப்படுத்துவதில்லை. இதன் மூலம் எங்கள் மருத்துவமனையில் சுகாதாரக்கேடு இல்லாமல் பார்த்துக் கொள்ள முடிகிறது. இப்போது வரை ஓரளவு சமாளித்து வந்தாலும், இன்னும் போகப்போக தண்ணீர்ப்பற்றாக்குறை அதிகமாகும் என்றுதான் கணிக்கிறார்கள். அரசாங்கம் அத்தியாவசிய சேவையில் உள்ள மருத்துவத்துறைக்கு தண்ணீர் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கக்கூடாது. இது சம்பந்தமாக உடனடி தீர்வு காண வேண்டியதும் அரசாங்கத்தின் கடமை. இதை வலியுறுத்தும் விதமாக இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்’’ என்கிறார்.இந்த அவல நாடகம் முடிவுக்கு வரட்டும்!– உஷா நாராயணன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi