திருவாரூர், ஜூலை 22: நீதிமன்ற பணிகளை செம்மைப்படுத்தும் விதத்தில் திருவாரூர் மாவட்ட நீதிமன்ற காவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கூடுதல் எஸ்.பி ஈஸ்வரன், குற்றபதிவேடுகள் கூட டி.எஸ்.பி பிலீப்பிராங்ளின் கென்னடி மற்றும் அனைத்து நீதிமன்ற காவலர்கள் கலந்துகொண்டனர். இதில் எஸ்.பி ஜெயக்குமார் பேசியதாவது, நீதிமன்ற பணிக்கும் செல்லும் போலீசார் நீதிமன்றங்களில் பிடிகட்டளை விபரங்கள், வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தல், அவை நீதிமன்றங்களில் பரிசீலனை முடிந்தவுடன் கோப்புக்கு எடுத்தல், வழக்குகளை கோப்புக்கு எடுத்ததிலிருந்து வழக்கு தொடர்புடைய எதிரிகள் மற்றும் சாட்சிகளை ஆஜர் செய்தல், மேலும் நீதிமன்ற அலுவலர்களுடன் இணைந்து வழக்களை விரைந்து தண்டனையில் முடிப்பதற்கான அனைத்து பணிகளையும் விரைந்து செய்திட வேண்டும். வழக்குகளில் எதிரிகள் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரியவந்தால் நீதித்துறையினரிடம் தகவல் தெரிவித்து பிணையதாரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களிலிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் கணினி வழியாக செல்வதால் அவை குறித்தும் ஒவ்வொரு நீதிமன்ற காவலரும் அறிந்திருக்க வேண்டும் என்றார்.