மதுரை, ஜூன் 5: நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள நாதூரைச் சேர்ந்த ஆல்வின் விவேக், சிவகங்கை கலெக்டர், டிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: காரைக்குடி தாலுகா கோட்டையூரில் இரு ஓடைகளின் வழியாக வரும் தண்ணீர் கோட்டையூர் கண்மாய், கோட்டையூர் தென் ஊரணி மற்றும் கோட்டையூர் குருநாதன் கோவில் ஊரணி ஆகியவற்றில் வந்து சேரும்.
இந்த ஓடை. கோட்டையூர் மற்றும் பிற புறநகர் கிராமங்களுக்கு மனித தேவைக்காகவும், கால்நடைகளின் குடிநீர், விவசாயம் மற்றும் பிற தொடர்புடைய அத்யாவசிய தேவைகளுக்கு மழைநீரை சேமிக்க மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்த ஓடையின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், மழைநீர் மூன்று நீர்நிலைகளை அடைத்து, அங்கு சேமிக்கப்பட்டு, அதன் மூலம் மழைநீர் தானாக ஓடுவதையும் சேமிப்பதையும் தடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் ஓடை புறம்போக்குகளில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அதில், 4 மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை கடந்த 2024ல் உத்தரவிட்டது. ஆனால், இன்று வரை அந்த உத்தரவு நிறைவேற்றப்படாமல் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.