வலங்கைமான், பிப். 25: வலங்கைமான் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் மூதாட்டி கண்களில் மிளகாய் பொடி தூவி செயின் பறித்த குற்றவாளிக்கு வலங்கைமான் நீதிமன்றத்தில் 3 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட நீத்துக்கார தெரு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (74). இவர், வீட்டில் தனியாக இருந்தபோது பட்டப்பகலில் கடந்த செப்டம்பர் மாதம் அடையாளம் தெரியாத நபர், மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த ரெண்டரை பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டான்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட கோயில் பத்து நடுத்தெருவைச் சேர்ந்த கணபதி மகன் அன்பரசனை (48) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்தனர்.விசாரணையில் மூதாட்டி கண்ணில் மிளகாய்பொடி தூவி சங்கிலியை பறித்ததை ஒப்புக்கொண்டான். மேலும் மூதாட்டி யிடம் பறித்த செயினை அப்பகுதியில் உள்ள மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக கூறி காவல் துறையினருக்கு முன்னதாக மண்ணில் இருந்து செயினை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தான். இச்சம்பவம் தொடர்பாக வலங்கைமானில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.இந்நிலையில் நீதிபதி சிந்தா அளித்த தீர்ப்பில் அன்பரசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராத விதித்து தீர்ப்பளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.