திருப்பூர், ஆக. 12: திருப்பூரில் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்டம் மேற்படிப்புகளுக்கான எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் நடத்துகிறது. இந்நிலையில், திருப்பூர் குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். கடும் சோதனைக்கு பிறகே மாணவ-மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக தேர்வு மைய நுழைவு வாயில் பூட்டப்பட்டதாகக்கூறி நுழைவு வாயில் முன்பாக மாணவ மாணவியர்கள் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.