கே.வி.குப்பம், மே 8: கே.வி.குப்பம் அருகே நீட் தேர்வு அறையில் மாணவி மயங்கி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடந்தது. இதேபோல் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சென்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த தேர்வு மையத்தில் மாணவ, மாணவிகள் நேற்று தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். மேலும் சப்-கலெக்டர் வெங்கட்ராமன் தேர்வு மையத்தினை அய்வு செய்தார். தாசில்தார் கீதா தலைமையிலான வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தேர்வு 2 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில், வேலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு அறையில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்தார். உடனடியாக மாணவியை மீட்டு தேர்வு மையத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்சில் மருத்துவரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய மாணவி மீண்டும் தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அரசு மருத்துவர் கண்காணிப்பில் மாணவி தேர்வை எழுதினார். மாணவிக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.நீட் தேர்வு அறையில் மாணவி மயங்கி விழுந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.