நீடாமங்கலம், ஆக. 31: நீடாமங்கலம் ரயில்வேகேட் நேற்று அதிகாலை சுமார் 4.50 மணிக்கு மூடப்பட்டது. தொடர்ந்து மன்னார்குடியில் இருந்து நெல் ஏற்றிய சரக்கு ரயில் முதலாவது நடைமேடையில் வந்து நின்றது. சரக்கு ரயிலின் என்ஜின் பிரிக்கப்பட்டது.தொடர்ந்து சென்னையிலிருந்து, மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் 2வது நடைமேடையில் வந்து நின்றது. பயணிகள் இறங்கிய பின் மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. தொடர்ந்து வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி செல்லும் சிறப்பு ரயில் சென்றது.
மேலும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வருகை குறித்து ரயில் நிலையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் ரயில்வே கேட் காலை 5.31 மணிக்கு திறக்கப்பட்டது. இதனால் 41 நிமிடங்கள் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் நீடாமங்கலத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பேருந்து பயணிகள், நெடுஞ்சாலை பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.