நீடாமங்கலம், ஆக. 2: நீடாமங்கலம் அருகே மது அருந்தி விட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீடாமங்கலம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ்குமார்,சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் மதியம் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, நீடாமங்கலம் -மன்னார்குடி சாலையில் சீதாராஜப்பையன்சாவடி பகுதியில் சாலையோரம் நின்று கொண்டு 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். மது அருந்தியதுடன் இல்லாமல் போக்குவரத்திற்கும் இடையூறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. தட்டி கேட்ட போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
மேலும், இது தொடர்பாக போலீசாரை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது,போக்குவரத்திற்கு இடையூறு செய்து உள்ளிட்ட வழக்கு பதிவு செய்து தென்காரவயல் கிராமத்தைச் சேர்ந்த குமார் (31) ஸ்டாலின் (31) கர்ணாவூரைச் சேர்ந்த மகேந்திரன் (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும், திருவாரூர் நீதிமன்ற உத்தரவுப்படி மன்னார்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.