கோவை, ஆக. 23: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் நிமலன் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘’தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பணியிடத்தை, தரம் உயர்த்தி வழங்கவேண்டும். பணிஓய்வு காரணமாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் 2013ம் ஆண்டு வரை நியமனம் இல்லாததால் 292 நில அளவர்கள், 702 குருவட்ட அலுவலர்கள் 800-க்கும் மேற்பட்ட சார்-ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றை, உடனடியாக நிரப்ப வேண்டும். 2018-2019ம் ஆண்டுகளில் சுமார் 200 நில அளவர்கள் பணியிடங்கள் குறுவட்ட பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக நில அளவர் பணியிடம் தரம் உயர்த்தப்படவில்லை. எனவே, உடனடியாக தரம் உயர்த்த வேண்டும்.’’ என்றார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், ஜெகநாதன், மாநில செயலாளர் சதீஷ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். முடிவில், மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.