திருத்தணி, ஜூன் 10: அரக்கோணத்தைச் சேர்ந்த லியோகுமார் (35) என்பவர், திருத்தணி அருகே நாபளூரில் மொத்தமாக 0.08 சென்ட் நிலத்தை கிரயம் பெற்று உட்பிரிவு செய்து அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அவரது நிலம் கையகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நில அளவீடு செய்து தரக்கோரி திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய பணம் செலுத்தி விண்ணப்பித்தும், நில அளவர் தொடர்ந்து 6 மாதங்களாக கால தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சல் அடைந்த, லியோகுமார் தனது குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்தின், நில அளவைப் பிரிவுக்கு நேற்று பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.
அவருடன் வட்ட துணை ஆய்வாளர், நில அளவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சர்வே பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். அதே நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு பத்திர பதிவு மற்றும் பட்டா வைத்துள்ள ஏழுமலை என்பவரின் மகன் தினேஷ் என்பவர் நில அளவை பிரிவு அலுவலகத்தில் அலுவலர்களை சந்தித்து நில அளவை நடத்த எதிர்ப்பு தெரிவித்தார். சர்வே செய்வதில் காலதாமதம் குறித்து நில அளவர் துர்கா கூறுகையில், ஒரே சர்வே எண்ணில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலத்தை உட்பிரிவு செய்து 2 பேரும் பட்டா பெற்றுள்ளனர். அதில் 0.04 சென்ட் நிலம் உட்பிரிவு செய்ததில் குளறுபடி நடந்துள்ளது.
இதனால் இருவரும் குறிப்பிட்ட இடத்திற்கு உரிமை கோரி வருகின்றனர். சர்வே பணிகளுக்கு இருதரப்பும் ஆட்சேபனை தெரிவித்து வருவதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார். குறிப்பிட்ட நிலத்திற்கு 2 பேரும் பட்டா மற்றும் உட்பிரிவு செய்து வைத்திருப்பதால், தொடர்து நில அளவைப் பணி மேற்கொள்வதில் முட்டுக்கட்டையாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண நிலத்தை கிரயம் கொடுத்த நபர் வந்து உறுதிப்படுத்தினாலோ அல்லது கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினாலோ மட்டுமே தீர்வு காண முடியும் என்று வட்ட துணை ஆய்வாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.