ஈரோடு, செப்.1: நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மிரட்டல் விடுப்பதாக மாற்றுத்திறனாளி மகளுடன் வந்த தந்தை ஈரோடு மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை சேர்ந்த சிக்கந்தர் வீதியில் வசிக்கும் வெள்ளியங்கிரி என்பவர் அவரது மாற்றுத்திறனாளி மகளுடன் நேற்று எஸ்பி அலுவலகத்தின் காத்திருப்பு அறையில் மனு அளிக்க காத்திருந்தார். இதையறிந்த ஈரோடு எஸ்பி ஜவகர், அவரது அறையில் இருந்து கீழே வந்து, மனுவை பெற்றுக்கொண்டார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகள் ஜனனி (14). மாற்றுத்திறனாளி. சுய தேவையை கூட நிறைவேற்றி கொள்ள முடியாது. வெளியிடத்துக்கு சக்கர நாற்காலியில்தான் செல்வார்.
என் வீட்டின் இருபுறமும் வசிப்பவர்கள் எனக்கு சொந்தமான காலியிடத்தில் சில அடி தூரத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதுபற்றி கேட்டால் அவதூறாக தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். வீட்டின் டிவி ஆன்டனாவை ஒருவர் உடைத்து சேதப்படுத்தி உள்ளார். எங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இம்மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி ஜவகர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.