தூத்துக்குடி,ஆக.31: தூத்துக்குடி, மில்லர்புரத்தைச்சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், மீளவிட்டான் கிராமத்தில் உள்ள தனது நிலத்தை அளந்து காண்பித்து எல்கை குறித்து தர வேண்டி தூத்துக்குடி தாசில்தாரிடம் மனு அளித்திருந்தார். இதற்கு ₹4 ஆயிரம் கட்டணமாக செலுத்தியுள்ளார். ஆனால் நிலத்தை அளந்து காட்ட தாசில்தார் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் மூலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் தூத்துக்குடி தாசில்தாரின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சேவை குறைபாட்டினை ஏற்படுத்திய காரணத்தினால், அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ₹25 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ₹ 10 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர். மேலும் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 2 மாதத்திற்குள் புகார்தாரருக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தனர்.