புழல், ஆக. 27: பெரம்பூரை தலைமையிடமாக கொண்ட ஒரு பிரபல தனியார் இனிப்பு நிறுவனம், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 26க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் ஸ்வீட் கடைகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக, செங்குன்றம் அருகே பூதூர்-கும்மனூர் சாலையில் இனிப்புகள் மற்றும் உணவு பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுழற்சி முறையில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த இனிப்பு தொழிற்சாலையில் பல்வகை இனிப்பு பொருட்களின் தயாரிப்புக்காக, ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தினமும் ஏராளமான நீர் உறிஞ்சப்படுகிறது.
இதனால் இந்நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவில் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும், இனிப்பு நிறுவனத்தில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், இதன் அருகிலுள்ள கோபாலபுரம் நகர் மற்றும் விவசாய நிலங்களில் வெளியேற்றப்படுவதால், இப்பகுதி நிலத்தடி நீரும் மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதவிர, இந்நிறுவனத்தை ஒட்டிய கிராம சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி வருவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு, அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வாகனங்களில் சென்றுவர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து, பூதூர் ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். சோழவரம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.