வேலூர், ஜூைல 29: வேலூர் அருகே சொத்து தகராறில் சிறுவனுக்கு விஷஊசி போட்டு கொல்ல முயன்றதாக தாய் அளித்த புகாரின் பேரில் அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் தாலுகா ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பிரியா. இவரது கணவர் தேவராஜ். இவர்களுக்கு தமிழரசன்(13), தனுஷ்(9) என இரண்டு மகன்கள் உள்ளனர். தேவராஜ் கடந்த 2014ம் ஆண்டு இறந்து விட்டார். இதனால் பிரியா தனது மகன் தனுஷை தனது தாயார் வீட்டில் விட்டுவிட்டு, மூத்த மகன் தமிழரசனுடன் கோவிந்தரெட்டி பாளையத்தில் தனது கணவர் வீட்டிலேயே வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கூலி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தவர், வீட்டில் தனது மகன் தமிழரசன் வீட்டில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவனுக்கு மயக்கம் தெளிய வைத்து விசாரித்தபோது, அதே ஊரை சேர்ந்த தனது உறவினர் வீட்டுக்கு சென்றபோது, சித்தி ஒருவர், தன்னை மிரட்டி, ‘நீ ஒழிந்தால் தான் சொத்து தங்களுக்கு கிடைக்கும்’ என்று கூறி ஊசி போட்டதாக கூறியுள்ளான்.
உடனடியாக தனது மகனை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரியா சேர்த்தார். அங்கு தமிழரசன் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இதுபற்றி பிரியா கொடுத்த புகாரின் பேரில் அரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், சொத்து தகராறில் சிறுவன் தமிழரசனின் சித்தி அவரை தாக்கியது தெரிய வந்தது. மேலும், சிறுவனுக்கு விஷஊசி போட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், சிறுவன் தமிழரசன் நலமுடன் ஐசியுவில் பெற்ற சிகிச்சைக்கு பின்னர் பொது வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து சிறுவனின் தாயார் பிரியாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘மகனின் கையில் ஊசி போட்டதற்கான அடையாளம் உள்ளதாகத்தான் தெரிவித்தேன், விஷ ஊசி என்று சொல்லவில்லை. நான், எங்களுக்கு சொந்தமான வீட்டில் ஒரு பக்கம் மகனுடன் வசித்து வருகிறேன். மறுபக்கம் எனது மைத்துனர், மாமனார், மாமியார் ஒன்றாக வசித்து வருகின்றனர். மற்றொரு மைத்துனர் குடும்பத்தினர் தனியாக வேறு வீட்டில் வசித்து வருகின்றனர். ஒரு சிறிய இடத்துக்குத்தான் இப்பிரச்னை. எனது மகனுக்கு பாதுகாப்பு இருந்தால் போதும் என்றுதான் போலீசில் புகார் தெரிவித்தேன்’ என்றார்.