நிலக்கோட்டை, ஆக. 14: நிலக்கோட்டை அருகே முசுவனத்து ஊராட்சி கல்கோட்டை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வூரில் உள்ள முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில் அருகே சுமார் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. கோயிலருகே தானாக வளர்ந்த ஆலமரம் என்பதால் அப்பகுதி மக்கள் அம்மரத்திற்கும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் திடீரென அந்த ஆலமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. வழக்கமாக இம்மரத்தின் கீழ் எப்போதும் ஆட்கள் தூங்குவது வழக்கம். ஆனால் மழை காரணமாக யாரும் அங்கு துங்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நேற்று காலை அப்பகுதி மக்கள் பூஜைகள் செய்து சாய்ந்த அம்மரத்தை அகற்றினர்.