மல்லூர், ஜூலை 4: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் பரவலாக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வேர் அழுகல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சாகுல் அமீத் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொடர் மழையால் நிலக்கடலை செடியில் வேர் அழுகல் நோய் தாக்க வாய்ப்புள்ளது. ஒருவகை பூசணம் தாக்குதலால், வேர் அழுகல் நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் 60 முதல் 100 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும். மண் செடி சருகுகளில், பூஞ்சானத்தின் வித்து வெகு நாட்களுக்கு உறக்க நிலையில் இருக்கும். கால்நடைகள் மற்றும் மனிதர்கள் மூலம் பரவி, பாதிப்பை ஏற்படுத்தும். மண் மீது உள்ள பயிர் கழிவை ஆழமாக உழவு செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு, டிரைக்கோ டெர்மாவிரிடி 4 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் என்ற அளவில், பூஞ்சானக்கொல்லி மூலம் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். எக்டருக்கு டிரைக்கோ டெர்மாவிரிடி 2 முதல் 5 கிலோ அளவில் 30 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம். அல்லது 500 கிலோ பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு கிராம் கார்பன்டாசிம் கலந்த கரைசலை செடியின் வேர் பகுதியில் ஊட்டி வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கடலையில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்
0