கள்ளக்குறிச்சி, ஜூன் 10: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆதனூர் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி மாணவர்களுடன் பெற்றோர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது, ஆதனூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளி 1946ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 79 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கடந்த 31.07.2024 முதல் இப்பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் அவரே மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர் ஒருவரை 2024-2025ம் கல்வி ஆண்டிற்கு பணி செய்ய நியமித்தார். மேலும் பள்ளி மேலாண்மை குழு மூலம் ஒரு ஆசிரியரும் பணியாற்றி வந்தனர். நிரந்தர ஆசிரியர் நியமனம் செய்திட 2 முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பது மட்டுமல்லாமல் பள்ளி நிர்வாக செயல்பாடும் மிகவும் மோசமான சூழலில் உள்ளது. எனவே இப்பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.