திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்பசாரை சேர்ந்தவர் கண்ணதாசன் (27). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அச்சரப்பாக்கம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய இருவீட்டார் சார்பில் நிச்சயம் செய்துள்ளார். அழைப்பிதழ் அச்சிட்டு திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கண்ணதாசன், அவருடன் வேலை செய்த பெண்ணை காதலித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு காதலியின் வீட்டு பூஜை அறையில் அவருக்கு தாலி கட்டி, கணவன் மனைவியாக வாழ்ந்ததாக தெரிகிறது. அந்த பெண், கண்ணதாசனுக்கு நிச்சயம் செய்த பெண்ணிடம் இதுபற்றி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அந்த பெண்ணின் உறவினரான மதுராந்தகம் அடுத்த புலியணியை சேர்ந்த ருத்ரகுமார் (எ) உதயா (40), திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூர் ராமு (எ) ராஜி (36), அவரது மனைவி சித்ரா ஆகியோர் கீழ் பசாரிலிருந்து, பனையூர் செல்லும் சாலையில் இருந்த கண்ணதாசனிடம் நேற்று முன்தினம் கேட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு அவரை தாக்கியுள்ளனர். இதில் கண்ணதாசனுக்கு நான்கு பற்கள் உடைந்தன. அப்போது சித்ரா விஷம் குடிக்க முயன்றதாகவும், அந்த பாட்டிலை மற்றவர்கள் தட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கண்ணதாசன் கீழே கிடந்த விஷத்தை எடுத்து குடித்தார். மருத்துவமனையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து உதயா மற்றும் ராஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….